Friday, July 29, 2011

முற்றுப்புள்ளி...


வாழ்வில் பணம் எப்பொழுதும் முக்கியம் இல்லை என நினைப்பவன் நான். அதற்கான பல காரணங்களில் இந்த சம்பவமும் ஒன்று. நான் பதினோராம் வகுப்பு படித்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி மற்றும் நான் மிகவும் மனம் வருந்திய நேரங்களில் இது மிக முக்கியமானது.

அவரை சில நேரங்களில் பல இடங்களில் பார்த்ததுண்டு ஆனால் மனம் பெரிதாய் கேள்வி கேட்டதில்லை. எப்பொழுதாவது மதிய உணவிருக்காக பள்ளியின் அருகே உள்ள சிறிய மெஸ்சில் சாப்பிடுவோம். அன்றும் அப்படித்தான் அவரை பார்க்க நேர்ந்தது. வயது எழுபது பக்கம், கிழித்த ராணுவ உடையிலும் கம்பீரமாய் கையில் ஒரு கழி வைத்திருந்தார். என்ன தீர்க்கமோ, நாங்கள் சாப்பிடும் வரை பார்த்தாரே ஒழிய எதையும் கேட்கவில்லை. ஆனால் அவர் யாசகம் கேட்காமலே கண்கள் பசியை பேசியது. நாங்கள் கைகழுவும் பொது தான் கவனித்தேன் என் நண்பன் மெஸ் முதலாளியிடம் எதையோ பேசிக்கொண்டிருந்தான். உடனே அவருக்கு ஒரு பார்சல் சாப்பாடை மெஸ் முதலாளி கையில் கொடுத்தார். ச்சே... அதை வாங்கிய அவர் கையில் ஒரு நடுக்கம், மனமும் வயிறும் முந்த போட்டிபோட, எப்பொழுதும் போல் வயிறு வென்றது தெரிந்தது. பின் நாங்கள் எல்லோரும் பள்ளி சென்று அன்றைய பொழுதை சுபமாக முடித்தோம்.

சரியாக ஒரு வாரம் கழித்து நான் பள்ளிச்செல்லும் வழியில் மஞ்சகுப்பம் பிள்ளையார் கோவில் சாலை ஓரத்தில் ஒரே கூட்டம். நான் உடனே சைக்கிளை நிறுத்தி என்ன வென்று பார்த்தால், அவர் தான் சாலையொரம் இரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி கண்கள் வெறித்து பார்த்திருந்தார். சர்வ நிச்சயமாக தெரிந்தது அந்த உடலில் உயிர் இல்லையென்று ஆனால் அந்த கண்கள் மட்டும் என்னை என்னமோ செய்தது அநேகமாக பேசியது. சில நேரம் அங்கேயே இருந்த நான் பின்பு போலீஸ் வந்ததும் கிளம்பிச்சென்றேன். அன்று முழுவதும் பாடத்தில் மனம் லயிக்கவில்லை, அவரது சிந்தனைகளே மீண்டும் மீண்டும் மனதில் நிழலாடியது. மனதைத் தேற்றிக்கொண்டு என் நண்பனிடம் மெதுவாக என் மன உளைச்சலை கூறினேன். அதன் பிறகு தான் அவர் வாழ்கையே ஒரு போராட்டம் என மெல்ல புரிய ஆரம்பித்தது. அப்பப்பா... எவ்வளவு கஷ்டம், போராட்டம், துரோகம், கொடுமை நிறைந்தது இந்த வாழ்கை.

அவர் ஒரு ராணுவ மேஜர், இந்திய பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வீரன், நேர்மையாளர் குறிப்பாக மிகவும் நல்லவர். அந்த குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர், 3 ஆண்கள் 2 பெண்கள் மற்றும் அவர். சிறு வயதிலேயே மனைவியை பறிகொடுத்தவர் இருந்தாலும் மறுமணம் செய்யாமல் தனி ஆளாக 5 பேரையும் வளர்த்தார். எல்லாருக்கும் திருமணம் முடித்து சொத்தை பிரித்த பொது தான் வந்தது பிரச்னை. அவர் கடலூரில் மட்டும் கிட்டதட்ட பத்து வீடுகளும் மற்றும் சுற்றுப் புறங்களில் நூறு ஏக்கர்களுக்கும் சொந்தக்காரர். எல்லா பிள்ளைகளும் சொத்தை வாங்கி கொண்டு அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். பாவம் வசதியாய் வாழ்ந்தவர் ஒரே இரவில் பிச்சை எடுக்கும் நிலை, அதுதான் மனமும் வயிறும் போட்டிபோட்ட இடம். கிட்டதட்ட பத்து வருட பசி வாழ்கை தான் அன்று அவர் கண்களில் பேசியது. அதன் முழு அர்த்தம் இப்பொழுது தான் புரிகிறது... அப்பாடா, நரகத்தில் இருந்து விடுதலை மற்றும் எல்லாவற்றுக்கும் கடைசியாக ஒரு முற்றுப்புள்ளி.

ஒ! சொல்ல மறந்தேபோனேன்... அவர் பெயர் யோகநாதன்...

Thursday, July 28, 2011

பாண்டிச்செல்வி

ஒரு பெண் மீது
இத்தனை வன்மமா
அவள் வாழ்வது என்றும் துன்பமா
சிற்றின்பமா பேரின்பமா
இது காலத்தின் சாபமா
இல்லை... இல்லை...
மிருகம் உலவும் சமூகமா!

என்ன நீதி இது
ஏழையாய் பிறப்பது பாவமா
காக்கும் கடவுளுக்கே தூக்கமா
இராமன் இங்கே ஏதம்மா
எல்லாம் ஓநாய் கூட்டம் தானம்மா
காமமும் பணமும் தான் உலகமா
ம்... எல்லாம் நம் தலை எழுத்தம்மா?

Friday, July 8, 2011

புத்தம் சரணம் கச்சாமி

எதை சொல்வது எதை விடுவது
இதயம் கனத்து போனது
அமைதியை யோசிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
பல நாள் சிந்தித்து பின் எழுதுகிறேன்
சேனல் 4 செய்தது பதிவல்ல...
ஒரு இனத்தின் மீதுள்ள
ஆக்ரோஷமான படுகொலைகள்!!!

சின்னசிறார்கள் முதல் வயோதிர்கள் வரை
பிணமாக சிதறி கிடக்கிறார்கள்
தமிழ் தாய்மார்களின் முலையறுத்து
வீதியில் கூவி கூவி விற்கிறார்கள்
விசாரணை என்று இளைங்கர்களை
கொத்து கொத்தாக கொல்கின்றனர்
பள்ளிகள் மீது குண்டுகள் வீசுவதும்
தமிழ் பெண்களோடு தவறாக நடப்பதும்
எதிர்த்தால் பாலியல் வன்முறைகள்
யாராவது ஏன்னென்றால் சுடுவார்கள்

புத்தன் போதித்த அன்பு எங்கே?
மனிதம் சவப்பெட்டியில் இங்கே!
போதி மரம் போதித்தது என்ன...
யுத்தமும் ரத்தமுமா?

Thursday, July 7, 2011

ஆணாதிக்கம்

என் மனைவி, அக்கா, அம்மா
சில நேரம் சொல்வதுண்டு
நான் ஆணாதிக்கவாதி என்று!
நாளை என் மகளும் சொல்லலாம்...

எது ஆணாதிக்கம்?
ஒன்றுமே புரியவில்லை!
நானும் சமைப்பேன்
துணிகளை துவைப்பேன்
எல்லா வேலைகளிலும் பங்கு கொள்வேன்
பெண்களை கை நீட்டுபவன் மிருகம் என்பேன்
பிறகு எது ஆணாதிக்கம்?
மீண்டும் சிந்தித்தேன்...
எல்லா சூழ்நிலைகளையும் அசைப்போட்டேன்
நிறைய புத்தகங்களையும் வலைபூவையும்
வாசிக்க வாசிக்க
மெல்ல புரிய ஆரம்பித்தது!?

பெண்கள் கேட்டால் அது அக்கறை?
ஆண்கள் கேட்டால் அது ஆணாதிக்கம்!

Wednesday, July 6, 2011

இயலாமை

பல சமயம் நினைத்ததுண்டு
என் நாட்டிற்காக வாழ
புத்தகங்கள் துணை புரிந்தது
இனத்திற்காக பொங்கி ஏழ
கண் முன்னே வந்தது தாய் தந்தையின் முகம்
சிரித்தது பின் அழுதது, அதில் துவண்டது என் நிறம்

சுயநலம் என்னை வென்றுவிட்டது
புத்தன் சொன்ன அன்பை கொன்றுவிட்டது
எம்மக்கள் அங்கே குருதியில் நனைகையில்
இங்கே நான் பொதி சுமக்கும் கழுதையாய்!
கடனால் வீழ்ந்த குடும்பத்தை, மானத்தை
மீட்க தவிக்கிறேன் உரிமையாய்?

காசில்லாத நேரத்தில் கண்ணியம் இருந்தது
சொந்தங்கள் எச்சில் உமிழும் வரை?
நீங்கள் சொல்வது கேட்கிறது - முட்டாள்
முதலில் இனம் அதன் பின் குடும்பம்...
என் குடும்பத்திருக்கு தேவை நான் - இல்லையேல்
அது ஒரு சுவர் இல்லா சித்திரம்!?